சமுக உறவில் தேடுங்கள்

Tuesday, May 15, 2012

நேற்றின் சாம்பல்

நேற்றின் சாம்பல் மாறக்கூடும்
கண்டங்கத்தரியாய்
கண்ணிவெடியாய்
தும்பைப்பூவாய் 
அரளி விதையாய்
ஆவாரம்பூவாய்
பவழமல்லியாய்
பாம்புப்பிடாரனாய்
பச்சோந்தியாய்
பாசமலராய்
ஒத்தடமாய்
ஒற்றையடிப்பாதையாய்
...........
...........
நேற்றின் சாம்பல்
கன்னங்கரேலென்றும் இல்லை
வெள்ளை வெளேரென்றும் இல்லை.
நேற்றின் சாம்பல்
சாம்பல் நிறத்திலிருக்கிறது.
 
நேற்றின் சாம்பலில்
பல்துலக்கிக் கொண்டிருக்கிறாள்
அம்மாத்தா கிழவி.
பன்னாட்டு நிறுவனத்தின்
பற்பசையில் எழுகிறது
என் அதிகாலைச் சூரியன்.
 
- மயூரா ரத்தினசாமி

Sunday, May 6, 2012

மரூஉ

கோயம்புத்தூரில் அசைவ உணவகங்களில் "குஸ்கா" என்றொரு ஐட்டம் உண்டு. அசைவ, சைவ துண்டுகள் இல்லாத பிரியாணி தான் இது. இதற்குள் நீங்கள் சேர்க்கும் ஐட்டங்களை பொறுத்து இது மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காக்கா பிரியாணி, நாய் பிரியாணி என்று நாமகரணம் பெறும். இந்த குஸ்காவையே கொஞ்சநாள் கழித்து Plain பிரியாணி என்றும், Empty பிரியாணி என்றும் தலைப்பிட்டனர். கவுண்டம்பாளையத்தில் நேற்று ஒரு கடையில் இதையே MT பிரியா...ணி என்று எழுதி வைத்திருந்ததை பார்த்தேன். நாளைய வரலாற்றாசிரியர்களுக்காக இந்த மரூஉ- வை பதிவு செய்கிறேன்.

இன்னொரு மரூஉ : முட்டை வாங்க மளிகை கடையில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்துக்கு வீட்டு பெரியவர், "வாசு நாயக்கர் ஆஸ்பத்ரியில நல்ல கண் ஆபரேசன் செய்வாங்களா" என்றார். எனக்கு எந்த ஆஸ்பத்திரி என்று புரியவில்லை. அவர் மீண்டும், "அதான் தினமும் டிவியில விளம்பரம் பண்றாங்களே, அதுதான். அங்க பரவால்லையா" என்றார். சட்டென அவர் சொன்னது Vasan Eye Care Hospital என மண்டைக்குள் ஒரு பல்பு எரிந்தது. ஆங்கில உச்சரிப்பை அவர் அவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார். இப்படித்தான் எங்கள் ஊரிலுள்ள பழமையான ராஜ வீதியை Raja Street என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அது தேசிய அளவில் இயங்கும் விளம்பர நிறுவனங்களிடம் போய் திரும்பவும் தமிழில் ராஜா தெருவாக மொழி பெயர்க்கப்பட்டு விளம்பரங்களில் இடம்பெற்றது. இதேபோல் காளப்பட்டி என்பது கலாபட்டி, வடவள்ளி என்பது வேதவல்லி என்றும் திரிந்து வந்தது. நல்லவேளை விளம்பரங்களில் சிறிய எழுத்துகளில் வந்ததால் அது நடைமுறையில் வரவில்லை.

ரத்தினசபாபதிபுரம் R.S. புரமாக, திவான் பகதூர் ரோடு D.B.ரோடாக உருமாற்றம் பெற்றதில் நம் அடையாளங்களை இழந்து விட்டோம். தமிழ்நாடு முழுவதும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கேரளாவில் Trivandrum என்று எழுதிக்கொண்டிருந்ததை ThiruvananthaPuram என்று எழுதுகிறார்கள். Mysore - Mysooru ஆகிவிட்டது. அனால் நாம் இன்னும் திருச்சியை Trichy, தூத்துக்குடியை Tuticorin, தஞ்சாவூரை Tanjore, கோயம்புத்தூரை Coimbatore, திண்டுக்கல்லை Dindigul என்றுதானே வெட்கமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறோம். ராமதாஸ் சும்மா இருந்தால் இதை கையில் எடுத்து கோடி பிடிக்கலாம்.

Wednesday, May 2, 2012

நெரிசல்

கவிதை வாசிக்க உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
சுக்கு காபி குடித்தாகிவிட்டது அல்லது குடிக்கப்போகிறோம்.
நாற்காலியில்  வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறீர்கள்.
அறைக்கு வெளியே சாலையில் இருசக்கர வாகனமொன்று
கிரீச்சென பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்கிறது.
நாயொன்று வாகனத்தில் அடிபட்டு
ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் திசைநோக்கி ஓடுகிறது.
அதன் கால் ஒடிந்திருக்கலாம்.
உங்களில் ஒருவர் செல்பேசியை காதில் வைத்தபடி வெளியேறுகிறார்.
ஊரெங்கும் கைப்பேசிகளின் கினுகிணுப்பு திடீரென அதிகரித்துவிட்டது.
ஒலி எழுப்பியபடி வருகிறது ஆம்புலன்ஸ்.
வாகன ஓட்டி இறந்திருக்கலாம்.
என் கால்கள் அத்திசை நோக்கி இழுபட துவங்குகிறது.
நீங்கள் இன்னும் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறீர்கள்.
மாமிசத் துணுக்குகளை தேடி அலையும் கருப்பு பறவைகள்
பெரியார் சிலை மீது எச்சமிட்டபடி பறக்கின்றன.
ஆளுங்கட்சியின் அண்ணா சிலையை பராமரிக்க நிறுவனங்களிடையே போட்டி.
போக்குவரத்து நெரிசலாகிவிட்டது.
சாலையில் வாகனங்கள் தத்தமது பாதை கேட்டு பிளிரத் துவங்கிவிட்டன.
காற்றோலிப்பான்களின் அலறல் படியேறிவந்து
உங்களுக்குப் பின்னால் காலியாக இருக்கும் இருக்கையில் உட்கார்ந்து கொள்கின்றன.
நெரிசல் அதிகமாகிவிட்டது.
நீங்கள் மெல்ல நகர்ந்து நெரிசலை தவிர்க்கப் பார்க்கிறீர்கள்.
குறுஞ்செய்தி ஒன்று உங்களை நள்ளிரவு விருந்துக்கு அழைக்கிறது.
நெரிசல் இன்னும் இன்னும் அதிகமாகவே
நீங்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் வேளையில்
நானும் கவிதை வாசித்தலை நிறுத்திவிட்டு குதிக்க வேண்டியதாயிற்று.
 
- மயூரா ரத்தினசாமி

Friday, April 27, 2012

சுடோகு

சுடோகு

(3x3) x 9 = 81 கட்டங்கள்

காலியானவற்றில்
உன் எண்களை நிரப்புகிறாய்
துவக்கத்தில் எண்கள்
இலகுவாக ஒத்திசைகின்றன
பொருந்திவர மறுக்கும்
இரு எண்களுக்காக
இடம்மாறும் எண்கள்
உன்னைச் சபித்துக்கொண்டே
நகர்கின்றன.

அழிப்பானில் பாதி தேய்ந்தபின்னும்
அச்சிட்ட எண்களை
தொடக்கூடதென்ற விதி 
உன்னை எரிச்சலூட்டுகிறது 
அச்சு எண்களை 
மறைக்கும் தந்திரத்தை 
மற்ற எண்களும் 
ரகசியமாய் ஆமோதிக்கின்றன.

தொடர்ந்த இடமாற்றத்தில் 
சலிப்புற்ற உன் எண்கள் 
உனக்கெதிராய் அணிதிரள   
சிறிது நேரம் கட்டங்களை
வெறித்துப் பார்த்துவிட்டு
செய்தித்தாளை கசக்கி எறிகிறாய்.

செவ்வனே நிரப்பப்பட்ட
அன்றைய கட்டங்களை
பக்கத்து இருக்கைக்காரர் காட்ட
கழுத்து நெரிபட்டு
விழிபிதுங்கி நீ வெடிக்கும் வேளையில்
இதை நான் எழுதவேண்டியதாயிற்று.

- மயூரா ரத்தினசாமி

(நெடுஞ்சாலையைக்  கடக்கும் நத்தை - தொகுப்பிலிருந்து)

Thursday, April 26, 2012

காணாமல் போவது பற்றிய குறிப்புதவி

காணாமல்  போவது பற்றிய குறிப்புதவி

ஒரு மழைநாளில்
தொங்கும் நீர்க்கயிறு பற்றி
இரவல் இறக்கை விரித்து
பூவிதழில் பூக்கும் பனித்திவளையுள் பதுங்கி
பறவையின் ஒலிக்குறிப்பில் இணைந்து
புகைபோக்கியில் நுழைந்து வெளியில் நீர்த்து
விளக்கின் எண்ணையில் கலந்து
குக்கரிலிருந்து வெளியேறும் ஆவியோடு சேர்ந்து
நான் காணமல் போய்விட்டால்
என்னை எங்கு தேடுவீர்கள்?

மேற்கண்டவற்றை நான்
எழுதிவைத்தே செல்கிறேன்
அங்கெல்லாம் தேடமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையுடன்.

- மயூரா ரத்தினசாமி